Monday 26 October 2015

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக பாடல்



ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக பாடல்
(பிரம்ம முராரி - மெட்டு)

ஐப்பசி பௌர்ணமி நாளில் நாமே
நம்பசி போக்கும் அன்னத்தால் சிவனை
காப்பிட்டு  வணங்கி அருள் பெறுவோமே
கூப்பி கை தொழுதிட குறைகள் தீரும்

அரியும் சிவனும் அரிசியாய் மாறி
அரிதான நோயாம் பசியை தீர்த்திட
அரிசியால் அன்னத்தை படடைத்தே நாமே
ஹரி சிவன் அருளை அளவின்றி பெறுவோம்

பஞ்ச  பூதப் பொருளாம் அரிசியை
பஞ்ச  பூத  தலைவன் சிவனுக்கு
பஞ்சாட் சரத்தை பாங்காய் ஓதி
வெஞ்சோற்றை சாற்றி வினைகள்அறுப்போம்

நெல்லை வடித்து அன்னமாய் மாற்றிட
நெல்லின் பிறவி முடிதல் போல
பல் பிறப்பின்றி பரகதி அடைந்திட
நெல் அன்னம் படைத்தே பலபிறப் பறுப்போம்

லிங்க வடிவான அரிசியின் அன்னத்தால்
லிங்கரூப  சிவனை அலங்காரம் செய்வோம்
கோடிலிங்க தரிசன பலனை பெறுவோம்
கூடிலிங்க ரூபனை போற்றியே மகிழ்வோம்

அன்னம் பாலிக்கும் தில்லை நடராசன்
எண்ணம் அறிந்து ஏற்றங்கள் அருள்வான்
திண்ணமாய் அருள்வான் வண்ணமாய் வாழ்வே
முன்ஜென்ம வினைதீர்த்து முக்தியும் அருள்வான்

அன்னத்தால் சிவனை அலங்காரம் செய்தே
எண்ணத்தில் இருத்திட ஏற்றங்கள் பெறுவோம்
அன்னம் குறைவின்றி அனுதினம் கிடைக்கும்
எண்ணம் நிறைவேறும் ஈசனின் அருளால்

பஞ்சம் பட்டினி இன்றியே வாழ
நெஞ்சம் மகிழ்ந்தே அன்னம் படைப்போம்
தஞ்சம் என்றே தலைவன் தாள்பற்ற
அஞ்சும் நெஞ்சில் ஆறுதல் பெறுவோம்

முழுநிலா நாளில் முழு மனதோடு
பழுதிலா பக்தியால் பணிவோம் சிவனை
வழுவிலா வாழ்வை வழங்கிட சிவனே
முழு நிலா பொலிவோடு  முகம் மலர்வோமே
           

                                          -தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்