Saturday, 21 September 2013

காஞ்சி மஹாஸ்வாமியின் அருளால் 100 வது பாடல்

அவனருளாலே அவன் தாள் வணங்கி :
காஞ்சி மஹாஸ்வாமியின் அருளால் 100 வது பாடல்
(புனரபி ஜனனம்  புனரபி மரணம் - மெட்டு )

நூறாண்டு வாழ்ந்திட வந்தீர் நீரே
ஓராண்டு ஓரிடம் சென்றீர் நீரே
ஓர் ஆண்டியாக வாழ்ந்தீர் நீரே
நீர் ஆண்டு கொண்டீர்  எங்கள் மனங்களை

அண்டி வந்தோர்க்கு அபயம் அளித்தீர்
வேண்டி வந்தோர்க்கு வேண்டிய தருள்வீர்
மண்டிக்  கிடந்த  மாயைகள் அகற்றி
நொண்டிக் கிடந்த ஆத்தீகம் வளர்த்தீர்

கண்டவர் எவரும் விண்டிலர் அன்றே
கண் கண்ட தெய்வமாய் வந்தார் இன்றே
கண் தந்த கண்ணப்பர்க்கு காட்சியே தந்த
மண் தந்த மகேசன் மனிதராய் வந்தார்

அண்டம் ஈரேழும் ஆளும் சிவனே
கண்டம் நீலமாய் மாறிய சிவனே
தண்டம் ஏந்தி தனி வழி காட்ட
மண்டகப் படியாய் தங்கிட வந்தார்


எண்தோள் ஈசன் எளிய உருவில்
மண் மேல் நடந்தார் மக்களை காக்க
விண்ணவர் போற்றும் விஸ்வநாதன்
கண்கவர் காவியில் காஞ்சியில் அமர்ந்தார்

எண்ணற்ற கோயிலில் ஏற்றினார் தீபம்
கண்ணற்ற குருடர்க்கும் காட்டினார் தீபம்
பெண்ணற்ற குடும்பத்தில் ஏற்றிட தீபம்
கண்ணுற்று ஏற்றினார் காருண்ய தீபம்

பெண்களை மதித்திட வெண்கலக் குரலால்
ஆண்களுக் களித்தார் அன்றாடம் பாடம்
பெண்களின் கடமையை பேணிக் காக்க
வெண்கலக் குரலால் வேண்டிக் கொண்டார்

பண்ணிய பாவத்தை அறுத்தே இவரே
நுண்ணிய ஆன்மீகம் வளர்த்தார் இவரே
எண்ணிய தீடேரி வாழ்வில் ஒளிர
கண்ணியமாய் வாழ கற்றுக் கொடுத்தார்

ஹர ஹர  சங்கர  ஜெய ஜெய  சங்கர
ஜெய ஜெய சங்கர  ஹர ஹர சங்கர

காஞ்சி மஹா  ஸ்வாமியின்  பொற்பாதங்கள் சரணம்.

மஹா  பெரியவாளுக்காக  100 வது பாடல் எழுதிய அடுத்த நாளே
குமரன் குன்றம் கோயிலில்  
மஹா ஸ்வாமியை  பற்றி அரை மணி நேரம்
மேடையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது,  
அவரது மஹிமையை  எண்ணி மெய் சிலிர்க்க செய்தது. 

பாடல்களும்  மேடை பேச்சுக்களும் பல்கிப் பெருக
உங்களின் பிரார்த்தனைகளையும்
மகாஸ்வாமியின் அணுக்கிரஹத்தையும் வேண்டும்,

தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர்
98847 18 324

Saturday, 14 September 2013

துறவர தூய்மையை காத்திட்ட குருவேகாஞ்சி மஹா ஸ்வாமி அருளால்
அவருக்காக அடியேனின்  98வது பாடல்(14.09.13)

(பிரம்ம முராரி சுரார்சித லிங்கம் - மெட்டில் பாடவும் )சந்திர சேகர  மஹா   ஸ்வாமி
மந்திரம் இன்றி மாயைகள் புரிவீர்
வந்திட உம்மிடம் வாழ்வில் வசந்தம்
வந்திடும் உடனே வாசலை தேடி

பூந்தளிர் தேகத்தை பார்த்திட்ட உடனே
பூக்கள் மலரும் மனதில் உடனே
பூப்போல் சிரிப்போம் நாளும் நாங்கள்
பூவாய் மலர்ந்தே அருள்வீர் வரங்கள்

கண் கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பீர்
கண்களால் பார்த்தே முன்வினை தீர்ப்பீர்
கண்கள் கலங்கி குமுறிடு   வோர்க்கு
கண்ணனாய் அருள்வீர் காருண்ய பார்வை

நெற்றி விபூதியை கண்டதும் நாங்கள்
பற்றிய வினை தீர்ந்து பாரினில் உயர்வோம்
பற்றியே உந்தன் பாதச் சுவடை
பற்றின்றி வாழ்ந்தே பவித்திர மாவோம்

தண்டம் ஏந்திய தண்ட பாணியாய்
அண்டி வந்தோர்க்கு அபயம் அளிப்பீர்
வேண்டியே  வந்து வணங்கிடும் முன்னே
வேண்டிய தருள்வீர் வேதனை தீர்த்தே

கற்பூர ஜோதியாய் காவி யுடுத்தி
அற்புத தரிசனம் அளிப்பீர் நித்தம்
பொற்பாதம் கண்டு வணங்கிய உடனே
அற்புதம் நிகழும் வாழ்வில் திடமே

தும்பிக்கை கணபதி போலவே நீரே
தூக்கி கை காட்டி  துயரங்கள் தீர்ப்பீர்
நம்பி  கை கூப்பியோர்  நலன்கள் பெற்றிட
அம்பிகை மனதோடு அருள்வீர் நீரே

விரும்பியே வந்து வீழ்ந்து வணங்கிட
திரும்பியே செல்லும் தீவினை யாவும்
அரும்பியே வளர்வோம் வாழ்வில் மெல்ல
திரும்பியே வருவோம் திருவருள் அள்ள

ஹர ஹர சங்கர என்றே துதித்திட
வரம் தர வருவீர் வாசல் தேடி
துறவர தூய்மையை காத்திட்ட குருவே
பெருவரம் அருள்வீர் பிறப்பறுத் திடவே
                   -
தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர்