Thursday 16 May 2013

காலடியை தொடர்ந்திடுவோம் காப்பாற்று சங்கரா

(தெளிசிதே மோட்சமு  - மெட்டு)

சந்திர சேகர  சரஸ்வதி  ஸ்வாமியே
சந்திரனை சூடிய சுந்தர ஈஸ்வரா
உன் திரு  உருவையே  உளமாற  நினைத்திட
வந்திடும்  வெற்றியே  வாழ்வினில் என்றுமே

விழுப்புரத்தில்  பிறந்த முழு நிலா முகத்தோனே
கழுபிணி  தீர்த்திடும் காருண்ய ரூபனே
முழு பரம்  பொருளாய்  உனைச்  சரண்  அடைந்திடவே
முழுவதும்  காத்திடுவாய்  முற்பிறப்பும் அறிந்தவனே

முக்தி தலமாம்  காஞ்சியில்   முழு நிலவாய்  அமர்ந்தவா
முக்கண்ணனின் அம்சமாய் முக்தியும் தந்தவா
எக்கணமும் ஈசனை  எண்ணியே  வாழ்ந்தவா
முக்கனியின் சுவையாகும்  உன் நாமம் பெரியவா

வேதத்தை காத்திட வந்திட்ட சங்கரா
பாதத்தை பற்றும் முன் பரிவுடன் காப்பவா
மோகத்தை வென்று  நீ   மோன தவம் புரிந்தவா
யாகத்தை வளர்த்து நீ  ஞாலத்தை  காத்தவா

அரும் தவ  ஞானியே  அனைத்துமே  அறிந்தவா
வரும் துன்பம் அறிந்து நீ  விரட்டிடுவாய்  வேல் விழியால்
கரு மேக   மழையாய்  அருள்  மழையை  பொழிவாய்
கருணை விழிப்பார்வையால்  மன இருளை போக்கிடுவாய்

நேரும் துன்பம் நீக்குவாய்  நேர்த்தியாய் வழி நடத்தி
பேரும் புகழும் பெற்றிடுவோம்  பரமனே உன் பாதம் தொழ
ஊரும் பேரும் கேட்டு நீ  ஊழ்வினைகள் களைவாய்
யாரும் குருவாய் ஏற்றிட எங்கும் காத்து அருள்வாயே

நித்திய அனுஷ்டானம் நிர்மலமாய் செய்தாய்
பத்திய உணவு  உண்டு பாரினை காத்தாய்
சத்திய வாழ்க்கையை  சாதித்துக்  காட்டினாய்
நித்திய மங்களம்  அனைவருக்கும் அளித்தாய்

காஞ்சியின் சங்கரா  காலடி சங்கரா
காலங்கள் கடந்தவா காமகோடி சங்கரா
காலமெல்லாம்  உன்புகழ்  சொல்லிடுவோம் சங்கரா
காலடியை  தொடர்ந்திடுவோம் காப்பாற்று சங்கரா

தித்திக்கும் கல்கண்டை  தந்திடுவாய் கைகளில்
தித்திக்கும் வாழ்கையை சித்திக்கச் செய்வாய்
எத்திக்கும் வேதங்கள்  ஒலித்திட செய்தாய்
சித்திக்கும்  சகலமும் உன் நாமம் சொல்லவே






No comments:

Post a Comment