Wednesday 12 June 2013

காஞ்சி மாமுனிக்கு 52வது பாடல்

காஞ்சி  மாமுனிக்கு 52வது  பாடல்      11.06.2013
(பிரம்ம முராரி - மெட்டு )

காஞ்சி மாமுனியின் காலடி பணிந்திட
நெருஞ்சிமுள் வாழ்க்கை குறிஞ்சியாய் பூக்கும்
காஞ்சியில் உறையும் காம தேனுவாம்
காஞ்சி மாமுனியை பணிவோம் நாமே

பஞ்சுத் திரியில் பகலவன் ஒளிபோல்
அஞ்சித் திரிவோர்க்கு அபயம் அளிப்பார்
பஞ்சுப் பொதியாம் பாரத்தை இறக்கிட
அஞ்சும் நெஞ்சுக்கு ஆறுதல் அளிப்பார்

நெஞ்சின் பாரத்தை பஞ்சாய் எரித்து
நஞ்சுண்ட கண்டனாய்  நம்வினை ஏற்பார்
பஞ்சின் மெல்லிய பாசப் பார்வையால்
நெஞ்சின் சோகம் தீர்த்தே மகிழ்வார்

தஞ்சம் அடைந்திட தடைகள் தகர்ப்பார்
நெஞ்சம் மகிழ்ந்திட விடைகள் பகர்வார்
கொஞ்சும் அவரின் கடைக்கண் பார்வையால்
மிஞ்சும் வாழ்வை படைப்பார் பலமாய்

பஞ்சம் பறந்திட நடந்தார்  ஊர்தோறும்
பஞ்ச மா  பாவங்கள்  மறந்திட செய்தார்
பஞ்சும் நெருப்பும் பற்றுதல் போல
அஞ்சும் எட்டும் பற்றிடச் செய்தார்
(ஐந்தெழுத்தையும்  அஷ்டாக்ஷரத்தையும் ஜெபம் செய்ய சொன்னார் )

விஞ்சிய வேதத்தை வளர்ந்திடச்  செய்தார்
எஞ்சிய கோயில்கள் பொலிவுறச்   செய்தார்
மிஞ்சிய அனுஷ்டானம் மிளிர்ந்திடச்   செய்தார்
எஞ்சிய வாழ்வை ஒளிர்ந்திடச் செய்தார்

செஞ்சடை சிவனாய்   உலா வந்தாரே
அஞ்சிடை நடந்தார் அவனியில் எங்கும்
நெஞ்சிடை வாழ்ந்திட்ட நல்லோர் அவரின்
நெஞ்சிடை பாரத்தை  குறைத்தார் அவரே
(அஞ்சிடை - ஐவகை நிலங்களிலும் நடந்தார் )

சஞ்சாரம் செய்தார் சகலர்க்கும் உதவிட
சஞ்சலம் தீர்த்தே  சௌஜன்யம்  வளர்த்தார்
நெஞ்சாழம் அறிந்தே நெகிழ்த்திடு வாரே 
வெஞ் சாமரமாய் பேசிடு வாரே

பஞ்சினால்  எண்ணெய்  ஆவியே ஆதல்போல்
தஞ்சம் அடைந்திட கடைத்தேற்று வாரே 
எஞ்சிய வாழ்வில் ஏற்றம் பெற்றிட
தஞ்சம் அடைவோம் அவர் திருப்  பாதம்
-தேனுபுரீஸ்வரதாசன்  இல.சங்கர்


No comments:

Post a Comment