Thursday, 1 August 2013

ஆடி கானம்ஆடி 16ம்  நாள்  கானம்  01.08.2013
(
பிரம்ம முராரி - மெட்டு )
-
தேனுபுரீஸ்வர தாசன் இல சங்கர்.

திருவேற் காட்டின்  கருமாரி அம்மா
வருவோர் குறைகள் நீ  பெறுவாய் அம்மா
கருமுதல்    காக்கும் கருமாரி தாயே
ஒரு நிகர்    இல்லா ஒப்பற்ற தாயே

மாங்காட்டில்  தவம் செய்த    மான் விழி   தாயே
நீங்காத இன்பம் நித்தியம் அருள்வாய்
ஏங்குவோர் குறை தீர்த்து   ஏக்கங்கள்  போக்கி
தேங்கிய துயரை நீங்கிடச் செய்வாய்

மாம்பலம் தலத்தின் முப்பாத் தம்மா
ஆம்பல் கண்களால் அருளை  பொழிவாய்
சோம்பல் நீக்கி சுகங்கள்  தருவாய்
வரம் பல   பெறுவர் வணங்குவோர் உன்னை

மயிலை தலத்தில் மயிலாக வந்த
கயிலை நாயகி கற்பக  வல்லியே
ஒயிலாக நிற்கும் ஒப்பற்ற தேவி
குயிலாக பாடிட   குறைகள் தீர்ப்பாய்

கோல விழியால் ஜாலங்கள் காட்டும்
ஞாலம் போற்றும் கோலவிழி அம்மா
கோலம் போட்டு   ஓர் விளக்  கேற்றிட
காலந்  தோறும்  காப்பாய்  நீயே

முண்டகக்  கன்னியே முப்பெருந்  தேவியாய்
அண்டியோர்க்  கருள்வாய்  அனைத்தும் நீயே
வேண்டியே உன்னை   வலம் வந்து   வணங்கிட
வேண்டிய  தருள்வாய் விரைவில்  நீயே

பச்சை அம்மனாய் ஒளிரும் தாயே
இச்சைகள் தீர்த்து ஈர்ப்பாய் நீயே
பச்சிலை போல   மனம் கொண்ட   தாயே
இச்செகத்   தில்வாழ   இனிதாய்  அருள்வாய்

சென்னையின் அன்னையே  காளிகாம் பா தாயே
உன்னை வேண்டிட உயர்வோம் வாழ்வில்
மன்னாதி மன்னரும் மண்டியிட் டுன்னை
அண்டிட அருள்வாய் அபயம் நீயே

திருவொற்றி  யூரின் வடிவுடை யம்மா
ஒரு வெற்றி அருள்வாய் வாழ்வில் அம்மா
பிறை நெற்றி பணிந்து  குறைகளை கூறிட
நிறைவேற்றி வைப்பாய் கோரிக்கை யாவும்

மேலூர் தலத்தின் திருவுடை யம்மனே
பாலூறும் தாய்மையோடருளும் தாயே
காலையில் உன்னை தரிசிக்க  தாயே
மாலைக்குள் அருள்வாய் மங்களம் யாவும்

திருமுல்லை வாயிலில் ஒரு மாலை வேளையில்
ஒரு முல்லை கொடியிடை உன்னைக் காண
ஒரு முல்லைப் பூவாய்  சிரித்தே  நீயே
வரும் தொல்லை   தீர்த்து   வரம் அருள்  வாயே

அம்பத்தூர் தலத்தில் அம்பிகை வைஷ்ணவி
நம்பி வந்தோர்க்கு நல்லருள் புரிவாள்
கும்பிட்ட கையை இறக்கிடும் முன்னே
அம்பிகை அருள்வாள் வேண்டிய தனை த்தும்

பெரம்பூர் தளத்தில் கோமதி  தாயே
வரம் பல அருளிட வந்தமர்ந்தாளே
சிரம் தாழ்த்தி வழிபட சீராய் அருள்வாள்
கரம் கூப்பி தொழுதிட  கண்ணீர் துடைப்பாள்

கங்கை அம்மனாய் எங்கும் அருள்வாள்
பொன்னி யம்மனாய் கன்னியர்க் கருள்வாள்
செல்லி யம்மனாய் பல்லுயிர் காப்பாள்
திரௌபதி  அம்மனாய் சௌக்கியம் அளிப்பாள்

ரேனுகாம் பாளாய்  வேணும்வரம்   தருவாள்
தண்டு மாரியாய்  வேண்டிய தருள்வாள்
முத்து மாரியாய்  பக்தருக் கருள்வாள்
நாகாத்  தம்மனாய்  நலம் பல   புரிவாள்

ஆடி 17ம்  நாள்  கானம்  02.08.2013
(தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி - மெட்டு)

தாயே காமாக்ஷி  - உன்னை
தேடியே வந்தேனே
தயை நீ புரிவாயே - எந்தன்
மாயைகள் நீக்கி நீயே

திங்கள் முகம் கொண்டவளே
பொங்கும் உந்தன் புன்சிரிப்பால்
மங்கும் எந்தன் வாழ்வில் நீ
பொங்கும் இன்பம் தந்திடுவாய்

சங்கரனின் நாயகியே
சிங்கார காமாக்ஷி
எங்கும் உந்தன் பேரருளே
தங்கிடவே அருள்புரிவாய்

அங்கையற்கண்ணி தாயே - உன்
பங்கஜ நேத்ரம் திறப்பாயே
செங்கைகள் காட்டி அருள்புரிந்து
எங்களின் குறை தீர்ப்பாயே

ஆடிப் பூர நாயகியே - உன்னை
தேடி வந்தோம் பூரத்திலே
வாடிப் போன  முகம் கண்டு - நீ
ஓடி வந்து அருள்புரிவாய்

கூடி பாடி மகிழ்ந்திடுவோம்
ஆடி பூர நன்னாளில்
நாடி வந்த நல்வரத்தை
தேடி வந்து தருவாயே

கோடி சந்திர முகம் கொண்டு
காமகோடியில் உறைபவளே
நொடிந்து வீழ்ந்தேன் உன் நிழலில்
நொடியில் எனை காப்பாயே

No comments:

Post a Comment